இரவு பத்தரை மணிக்கு மாவு கடையில் 100 ரூபாய் மின் பரிவர்த்தனை செய்த போதுதான் கவனித்தேன். gpay செயலியில் புதிதாக 20 ரூபாய் பரிவர்த்தனை பற்றி அறிவிப்பு இருந்ததை. 20 ரூபாய்க்கு என்ன செலவு என்று எவ்வளவு யோசித்தும் பிடிபடாமல் போக, அப்போதுதான் கண்டேன் அது செலவு பதிவு அல்ல வரவு என்பதை. இணையாக டிஜிட்டல் மோசடிகள் பற்றி நாம் கேள்விப்பட்டவை எல்லாம் நினைவுக்கு வர, சீரியல் கில்லர்களைக் கொள்ளும் சீரியல் கில்லர் போல , ஸ்கேமர்களை ஸ்கேம் செய்யும் ஸ்கேமராக மனதில் கற்பனைகளை விரித்துக்கொண்டு பத்து பதினைந்து அடிகள் கடந்திருப்பேன். செயலி குறிப்பிட்ட பெயர் சட்டென்று தட்டுப்பட இன்று புதிதாக பள்ளியில் நம் வகுப்புக்கு மட்டுமான வாட்ஸாப் குழுமத்தில் இணைய அழைப்பு வர , என்னுடைய 3 தோழிகளின் தொடர்பு கிடைக்குமோ என்ற ஆவலில் குழுவில் இணைந்ததும் , 11, 12 வகுப்புகளில் உடன் பயின்ற ஒரு மாணவரின் பெயர்தான் gpay இன்று குறிப்பிட்ட பரிவர்த்தனையை செய்தது என்பதும் புரிந்தது.
தொண்ணூற்று எட்டோ ஒன்பதோ , ராஜ்யபுரஸ்கார் தேர்வுக்காக பள்ளியிலிருந்து 5 சாரணியர் , 5 சாரணர் தேர்வு செய்யப்பட்டு முசிறியில் நடைபெற்ற பயிற்சி மற்றும் தேர்வு முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டோம். இருபாலர் பள்ளி என்றாலும் 10ம் வகுப்பு வரை, A மற்றும் B பிரிவு மட்டும் மாணவியருக்கும் C முதல் G வரை மாணவர்களுக்கும் , H ஆங்கில வழியில் பயிலும் மாணவ மாணவியருக்குமானது. தெற்கிலும் மேற்கிலுமென இரண்டு வாசல்கள் . தெற்கு மாணவர்கள் செல்லும் வழி , மேற்கு மாணவிகளுக்கு. அதை ஒட்டியே வகுப்பறைகளும். கீழ்ப்படிதலையும், மனனம் செய்து ஒப்பிப்பதையும், மதிப்பெண் பெறுதலையும் மட்டுமே தகுதியாகக் கொண்ட நான் சாரணியர் படைக்கு தேர்வு செய்யப்பட்டதை இன்றுவரை ஏற்கவோ நம்பவோ இயலுவதில்லை எனக்கு.
எங்கள் மாவட்டத்தில் புத்தக கண்காட்சியோ , அறிவியல் கண்காட்சியோ நடைபெற்றால் பள்ளியிலிருந்து அதிகபட்சமாக 5 மாணவ மாணவியர் பள்ளி சார்பாக அரசு செலவில் அழைத்து செல்லப்படுவர். இந்த ஐவர் தேர்வு எப்போதுமே மதிப்பெண் மற்றும் மாவட்ட ஆட்சியர் பள்ளிக்கு கண்காணிக்க வரும்போது கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் அளிப்பது போன்றவற்றின் அடிப்படையில் அமையும். அந்த பயணங்களில் பேருந்து செலவு இருக்காது. பள்ளியிலிருந்து எழுத்து படிவம் ஒன்றில் ஆசிரியர் மாணவர் பெயர் குறிப்பிட்டு நடத்துனரிடம் காண்பிக்கப்படும் என்று நினைக்கிறேன். அதே முறைதான் இது போன்ற முகாம்களுக்கான பயண செலவும். 5 நாள் முகாம். முதல் நாள் காலை 4 மணிக்கு அனைவரும் பேருந்து நிலையத்திலிருக்கும் அண்ணாவோ / பெரியாரோ / அம்பேத்கரோ சிலை அருகில் குழும வேண்டும். கடலூரிலிருந்து திருச்சி செல்லும் முதல் 310 பேருந்தில் புறப்படவேண்டும் என அறிவுறுத்தப்பட்டோம். அந்த அதிகாலையில் லேசான மழைத்தூறல் இருந்ததாக நினைவு. அப்பா என்னை சைக்கிளில் அழைத்து சென்றார். முதல்நாள் இரவு அணில் சேமியா உப்புமா சாப்பிட்டிருந்தேன். சரியாக தூங்கவில்லை. பால் ஒவ்வாமை உண்டு என்பதால் காலையில் கொள்ளுப்பாட்டி வெறும் வயிற்றில் பெண் பிள்ளை வெளியே செல்லக்கூடாது என கூறி நீர்மோர் அருந்த பணித்திருந்தார். பேருந்து மிக தாமதமாக தான் வந்தது. மழைக்கு ஆசிரியர் இருவர் தேநீர் பருக செல்ல , தேநீர் கடைக்காரரிடம் மாணவர்களுக்கு ஹார்லிக்ஸ் கொடுக்க சொல்லி இருந்தார் போலும். அவர் 10 பேருக்கும் ஹார்லிக்ஸ் கொடுத்துவிட மாணவருள் இருவர் அதைப் பெற்றுவந்து மாணவிகளுக்கு கொடுக்க , தேநீர் கடைகளில் ஏதாவது பருகுவதுபற்றி வீட்டுக்கெடுபிடிகள் நினைவு , பால் ஒவ்வாமை எண்ணம் எல்லாம் சற்று தடுமாற செய்தாலும், ஏற்கனவே கலந்துவிட்டதால் அந்த காலையில் வேறு யாருக்கும் தர முடியாதென கடைக்காரர் திருப்பி எடுத்துக்கொள்ள மறுத்தது, மாணவர்களின் வற்புறுத்தல் , அப்பா கண்டுகொள்ள மாட்டார் , வீட்டிலும் சொல்ல மாட்டார் என்ற தைர்யம் , ஹார்லிக்ஸ் மணம் எல்லாம் சேர்ந்து என்னை குடிக்க வைத்தது.
சிறிது நேரத்தில் 310 வர நாங்கள் புறப்பட்டோம். பேருந்து வடலூரைக்கூட தொடவில்லை. உள்ளே சென்ற பால் வேலையை செய்ய ஆரம்பித்திருந்தது. முதல் நாள் இரவில் உண்ட சேமியா உப்மா தூக்கமின்மையால் சீரணமாகாதிருக்க பாலும் உடன் சேர 10 நிமிட பேருந்து பயணம் மொத்தமாக வாந்தி எடுக்க வைத்தது . ஆசிரியர் மாணவியர் சற்று விலகிக்கொண்டனர். பயணம் அதன் பிறகு மிக நன்றாகவே அமைந்தது. முதல் முறை, காவிரி ஆற்றின் பாலத்திற்குமேல் பயணம். அவ்வளவு பெரிய நீர்நிலையை அப்போதுதான் முதல்முறை பார்த்தேன். பொன்னியின் செல்வன் வாசித்திருந்தேன். கற்பனையைக் கடந்த பிரமிப்பின் குதூகலம்.
முகாம் முடிந்து பள்ளி திரும்பும் படலம். திட்டம் தோல்வியுற்ற மாற்றுப்பயணம். திருச்சி செல்லாமல் வேறு ஏதோ வழியில் பெரம்பலூருக்கு வந்தோமென்று நினைக்கிறேன். அங்கிருந்து கடலூர் செல்லும் பேருந்தில் பயணத்தை தொடர வேண்டும். பேருந்து நிலையத்திலிருந்த உணவகத்தில் உணவுண்ண அவசர ஏற்பாடானது. எல்லோருக்கும் ஆசிரியர் பரோட்டா ஆர்டர் செய்தார். பரோட்டா என்றால் அசைவம் என்று எண்ணிக்கொண்டு நான் பசி இல்லை வேண்டாம் என்று கூற, முதற்பயண அனுபவம் எல்லோருக்கும் நினைவில் இருந்ததால் யாரும் வற்புறுத்தவில்லை. அவரவர் உணவிற்கு காசு கொடுக்க சொல்லி ஆசிரியர் வெளியேற ஒரு மாணவரைத் தவிர அனைவரும் கொடுத்துவிட காசு இல்லையென அழும் நிலையில் 12 / 13 வயது மாணவர் , பார்க்க 5 / 6 வயது மதிக்கும்படியான தோற்றத்துடன் நின்றிருந்தது இன்னும் நினைவில் உள்ளது. ஆசிரியர் வேறு யாரிடமாவது வாங்கிக்கொடு , பள்ளி சென்று திருப்பிக்கொடு என்று சொல்லிவிட்டார். எந்த மாணவரிடமும் காசு இல்லை. எனக்கு வீட்டில் 25 ரூபாய் கொடுத்திருந்தனர். அது செலவாகவில்லை . தொலையவும் இல்லை. பாதுகாக்கும் அளவு கவனம் விழிப்புணர்வெல்லாம் எனக்கு இல்லை. மாநிலம் முழுதும் இருந்து முகாமில் பங்கு பெற்ற அத்தனை மாணவர்களின் ஒழுக்கம் , நன்னடத்தை மட்டுமே, என்னிடமெல்லாம் பொருள் / பணம் பத்திரமாக இருந்ததற்கு காரணம். அவர் உணவிற்கான 20 ரூபாயை நான் கொடுக்க எல்லோரும் பள்ளிக்கு திரும்பினோம். அதன்பிறகு அந்த மாணவரை சந்திக்கவில்லை.
இந்நிகழ்வை எப்படியோ அறிந்த என்னுடைய தமிழ் ஆசிரியை வகுப்பில் அந்த 20 ரூபாயை வாங்கி வர சொல்லி அனுப்பினார். எனக்கு அம்மாணவர் எந்த பிரிவு , வகுப்பறை ஏதும் தெரிந்திருக்கவில்லை. மீண்டும் பார்த்த நினைவும் இல்லை . ஆனால் காசு திருப்பி தரும்படி கேட்டதாக ஒரு குற்ற உணர்வு இப்போதும் தொடர்வதுண்டு.
11 மற்றும் 12 வகுப்புகளில் இருபாலருக்கும் பொதுவான துறை சார்ந்த பிரிவுதான் . இருவருக்கும் ஒரே துறை கிடைத்திருந்ததால் ஒரே வகுப்பு. 3ம் வகுப்போ 4ம் வகுப்போ என எண்ணத்தக்க மெல்லிய உருவத்துடன், வெளிர் நிறம் , எப்போதும் அமைதியான பயந்த ஸ்வபாவத்துடன் இருப்பார். ஒருவேளை நான் வகுப்பிலிருந்துகொண்டு காசு கேட்டுவிடுவேன் என்று அஞ்சுவதாகக் கூட நான் எண்ணிக்கொண்டதுமுண்டு.
எனது உயர்நிலை வகுப்பாசிரியரான வேதியியல் ஆசிரியர் மீது எனக்கு அளவு கடந்த பக்தி. எங்கள் ஊரின் முந்தைய இரு தலைமுறை பெண்கள் பெரும்பாலோர் மிகச்சிறு வயதில் அன்னை தந்தை இருவரையும் இழந்த, பாட்டியால் மட்டும் வளர்க்கப்பட்டு மேல்நிலைக்கு உயர்ந்த அவரை, முன் மாதிரியாக சொல்லி சொல்லி தங்கள் பிள்ளைகளை வளர்த்திருப்பர். என் அன்னை மற்றவர்களை விட சற்று கூடுதலாகவே சொல்லி எங்களை வளர்த்தார். அந்த பள்ளியில் சேரும்போதே அந்த ஆசிரியர் மீது பெரும் மரியாதை , பக்தியுடன் தான் நான் இருந்தேன். அதுவும் அவர் வகுப்புகள் எல்லாம் அவர் மீதான மதிப்பை மேலும் பெறுக செய்தது. வெண்முரசு வாசகர் ஒருவர், ஜெ ஸாருக்காக சிரத்தை கூட வெட்டிக்கொள்வேன் என்று குறிப்பிட்டதுபோல நானெல்லாம் எங்கள் கெமிஸ்ட்ரி சாருக்காக சிரத்தை வெட்டிக்கொள்வேன் என்னும்படியான பக்தி. அவருக்கு முன் அனுமதியின்றி மாணவர் எவரும் விடுப்பு எடுத்தால் பிடிக்காது. கடுமையான தண்டனைகள் தருவார். இந்த மாணவர் 11ம் வகுப்பில் ஜூலை / ஆகஸ்ட் சமயத்திலேயே ஒருநாள் விடுப்பு எடுத்து ஆசிரியரால் கடிந்துகொள்ளப்பட்டு பெற்றோரை அழைத்துவர பணிக்கப் பட்டிருந்தார்.
இந்த மாணவர் சிறு வயதிலேயே தந்தையை இழந்தவரென அப்போதுதான் அறிந்தோம். அவர் அன்னை வந்திருந்தார். வயதுக்கு மீறிய முதுமை. மிக பழைய பழுப்பேறிய புடவை, பொருத்தமே இல்லாமல் ஊக்குகளால் இணைக்கப்பட்ட ஜாக்கெட், நகமற்ற , செறுப்பற்ற கால்கள் என வறுமையின் மறு உருவமாக நின்றிருந்தார் அந்த அன்னை. அவருக்கும் பேச்செல்லாம் ஒன்றும் வரவில்லை. ஒருவழியாக நாங்கள் புரிந்துகொண்டது , அவருக்கு ஒரு மூத்த சகோதரி உண்டென்றும், சமீபத்தில் அவருக்கு திருமணம் செய்து கொடுத்திருப்பதும், தந்தை இல்லாததாலும் , தான் செய்யக்கூடாது என்பதாலும் , தந்தை இடத்திலிருந்து ஆடி சீர் செய்ய தன் மகன் செல்ல வேண்டி இருந்ததால் விடுமுறை எடுத்தான். அவனை மன்னிக்க வேண்டும். இனி விடுமுறை எடுக்காமல் பள்ளிக்கு வருவான். அவனே தன் நம்பிக்கை. அவனுக்கு ஒரு நல்வழி காண்பிக்க வேண்டுமென கும்பிட்ட கையோடு நின்றிருந்தார். இந்த நிகழ்வுக்கு பிறகு, நினைவுக்கே வராத நிகழ்வு ஏற்படுத்திய என் குற்ற உணர்வு இன்னும் பேருரு கொண்டுவிட்டது.
அந்த இரு ஆண்டுகளிலும் அம்மாணவருக்கு நிகழ்ந்த அந்த வயதில் எவரும் அனுபவிக்க கூடாத கொடுமைகளுக்கெல்லாம் நான் அதே வகுப்பிலிருக்கும் ஒரு பார்வையாளராக மட்டும் இருந்தேன்.
இவர்தான் நேற்று குழுவில் இணைந்த என் எண்ணை கண்டுகொண்டு சோற்றுக்கணக்கு கதை சொல்லிப்போல பரோட்டா கணக்கைத் தீர்த்திருக்கிறார் என்றுணர்ந்து வீட்டிற்கு வந்து பத்தரை மணிக்கு மேல் அவரை வாட்ஸாப் செய்தியில் தொடர்பு கொண்டு சிறிது வம்பு செய்து வைத்தேன்.
Comments
Post a Comment