மெடிக்கல் ஆஃபீசர்

"ஆஃபீசர் னா அவர மாதிரி இருக்கனும். அவர் ஒன்னு சொன்னா அப்பீலே கிடையாது. புது பேட்ச் ஜாயின் பண்றப்போ ஒவ்வொருத்தரும் பேர், நம்பர்,  ஊர் மட்டும் 6 செகண்ட்ல சொல்லுவாங்க. ஒருமுறைதான் கேட்பார். பின்னால எத்தன வருஷம் கழிச்சு 400 அடி, 400 கஜம்னு கூட சொல்லலாம் தூரத்துல போனாலும் சரியாய் பேர் நம்பர் சொல்லி கூப்புடுவார். கண் அவ்ளோ ஷார்ப். மெமோரியும்தான். ஒவ்வொருத்தரோட 7 டிஜிட் நம்பரும் ஞாபகத்துல இருக்கும். எதுக்கு கூப்பிடறாரோ னு பயந்துட்டு வருவான். ப்ரோமோஷன் ஆயிடுச்சா னு கேட்பார். இல்லேனு சொன்னா ஸ்லிப் கொடுத்து இவர பாரும்பார். பாத்துட்டு ப்ரோமோஷன் லெட்டரோட வருவான்." அவர்  சொன்னார். இரண்டாண்டுகளுக்கு முன் அவருடைய சதாபிஷேகத்தில் பார்த்ததற்கு சற்று பூசினாற்போல இருந்தார். 60 கிலோ மீட்டர் கார் பயணம் கால்களை வீங்க செய்திருந்தது. பசுந்தயிரில் மெல்லிய ஆடை கட்டியது போல கண்கள் குழம்பி இருந்தன.

பத்து அடி தள்ளி என்னவோ கிடக்க அதைச் சுற்றி எவையோ மொய்த்தன. கண்ணாடி அணிந்திருந்தும் என்னவென்று கண்டுணர இயலவில்லை. கருத்து எப்போதுமே வாய்ப்புள்ள எல்லாவற்றையும் இருக்கலாம் என்று சொல்லுமே தவிர ஒருநாளும் இதுதான் என்று தனித்து குறிப்பிடாது. என் பார்வை சென்ற திசை நோக்கியவர், "கனிந்த வாழைப்பழத்தோல், முழுதும் கட்டெறும்பு மொய்க்கிறது" என்றவர் தொடர்ந்தார். "தினமும் முருங்கை கீரை ரசம் குடி. கண் பார்வை தெளிவுறும்". நெசவு செய்பவர்க்கு தொண்ணூறானாலும் பார்வை மங்காதது அதனால்தான். முருங்கை அதிகம் இருந்தால் அது நெசவு செய்யும் முதலியார் வாழும் பகுதி என்றறியலாம்".

"நான் குரூப் ஃபோர் தான். ஒன்றரை லட்சம் பேரில் ஆறு பேரின் ஷூட்டிங் ஸ்கில்ல பார்த்து என்னோட ஆஃபீஸர் குரூப் த்ரீயா ப்ரொமோட் செய்தார்.  துப்பாக்கில போடற 5 குண்டும் டார்கெட்டோட ஒரே துளையில போற மாதிரி சுடுவார். முப்படைக்கும் ஒவ்வோர் வருஷமும் துப்பாக்கி சுடும் போட்டி நடக்கும். எல்லா வருஷமும் அவரே ஜெயிப்பார். வித்யாகர்வம் அதிகம். அதனால் அவர வீழ்த்தத்  துடித்தோரும் அதிகம்."

"செலக்ட் பண்ண ஆறு பேரையும் அவரோட போட்டிக்கு துப்பாக்கி சுட கூப்டார். இவர் தலைக்கனத்தை குறைக்கணும் னு விரும்பின இன்னொரு ஆஃபீசர், என்னை தனியா கூப்பிட்டு முத குண்டு டார்கெட்டை சரியாய் ஹிட் பண்றது ரொம்ப கஷ்டம். ரெண்டாவது குண்டு கொஞ்சம் ஈஸியா வெளிய வரும். முதல்ல அவன சுட சொல்லு. எப்படி சுடரான்னு , எத்தனாவது கிளிக் ல குண்டு ரிலீஸ் ஆகுதுன்னாலும் நோட் பண்ணு. அடுத்து நீ சுடுன்னார். அதையே பண்ணேன். அசந்துட்டார் ஆஃபீசர்".  

 "கோவா 62 தெரியுமா ? நா 1961 ல ஜாயின் பண்ணேன். 1962 ல கோவா விட்டு போனப்போ, முறையே இல்லாமே நெனச்ச இடதுலலாம் வச்சிட்டு போய்ட்டான். எங்கயும் நகரமுடியாது . ஆஃபீஸ் கதவ திறந்தா ஒன்னு வெடிக்கும் மூடினா ஒன்னு வெடிக்கும் . எந்த பக்கம் அடி எடுத்து வச்சாலும் வெடிக்கும். இது சரிவராது னு பாம் ஸ்க்வாட்ஸ் கிட்ட இன்போர்ம் பண்ணாங்க. மெட்ராஸ் ரெஜிமெட், பாம்பே ரெஜிமெட் , கல்கத்தா ரெஜிமெட் மூனும் பெங்களூர் கேம்பஸ்ல இருந்தது. முதல்ல கல்கத்தா ரெஜிமெட் க்கு ஆடர் வந்து, போனாங்க. ஒருத்தர் கூட திரும்பல. அடுத்ததா பாம்பே ரெஜிமெட் போனாங்க. அவங்களும் ஒருத்தர் கூடத் திரும்பல. மெட்ராஸ் ரெஜிமெட் க்கு ஆடர் வந்தப்போ, எங்க ஆஃபீசர் காஷ்மீர் , சீனா பார்டர்  னு நார்த் கு ட்ரான்ஸ்பர் ஆகி போன இன்டெலிஜென்ட்ஸ் எல்லாரையும் அவசரமா வரவச்சார். எங்கள்ட்ட பேசினார். ஏற்கனவே போன ரெண்டு டீம் ல ஒருத்தர் கூட உயிரோட வல்ல. என் டீம் ல ஒருத்தனுக்கும் ஒரு சொட்டு ரத்தம் கூட போகக் கூடாது. உங்களால முடியும்னு தான் உங்கள அனுப்பறேன். குடைக்கம்பிய தரையோட 10 டிகிரி ல வச்சு 2 சென்டி மீட்டர் கு கம்மியா மெல்ல நகர்த்தி  பார்க்கனும். செங்குத்தா வச்சிடவே கூடாது. பெரும்பாலும் அவன் பின்ன விட்டுட்டு தான் போயிருப்பான். ஏதாது தட்டுப்பட்டா முடிஞ்சா பின்ன போட்டு பாம லாக் பண்ணிடுங்க. உங்கள்ட்ட சேப்டி பின் இருந்தா அதால கூட லாக் பண்ணுங்க. இல்லேன்னா என்னை கூப்பிடுங்க. முடியலைன்னா முடியலைனு சொல்லிட்டு உயிரோட வந்துடுங்க. யாரும் ஒரு சொட்டு ரத்தம் கூட சிந்திடக்கூடாது."

எங்க டீம் பாமெல்லாம் க்ளியர் பண்ணிட்டு பத்திரமா வந்து சேர்ந்தோம். அந்த நேரத்துல அங்க ஒரு பைக் ஷோரூம் மொத்தமா அபாண்டன் பண்ணிட்டு போயிருந்தாங்க. அங்க இருந்த பைக்ஸ் எடுத்து எங்க டீம் ல இருந்த எல்லாருக்கும் ஒரு பைக் கொடுக்க சொன்னார். எல்லாருக்கும் 50% எக்ஸ்ட்ரா பென்ஷன் னு எழுதி கொடுத்துட்டார்.

1971 ல 6 பேர்ல ஒருத்தனா நா ஜீப் ல போயிட்டு இருந்தேன். 6 மாசம் கழிச்சு நெனவு வந்தப்போ மத்த 5 பேரும். ம்ம்ம்... இவர்தான் என்னை காப்பாத்தி ஹோஸ்பிடல்ல சேர்த்திருக்கார். டெல்லி ஹாஸ்பிடல் வராண்டால வீல்சேர்ல நர்ஸ் என்னை உட்கார வச்சிருந்தாங்க. கல்லு மழை. 15 அடி தள்ளிதான் வெளி. ஆனா என்மேலேயும் அந்த கல்லு சுளீர் னு விழுந்தது.  இதை பார்த்தவர் தனக்கு நெஞ்சு வலின்னு சொல்லி நா இருந்த பெட் கு பக்கத்து பெட் லேயே அட்மிட் ஆகி என்னை பார்த்துக்கிட்டார். வார் வூண்டெட் னு செர்டிபிகேட் கொடுத்து என்னை அனுப்பினார். இதனாலலாந்தான் எனக்கு நிறைய பென்ஷன் வருது. சில வருஷத்துல ஒரு ஜீப் ஆக்சிடேன்ட்ல அவர் ஸ்பாட்லயே... ம்ம்ம்..."

அறிமுகமானதிலிருந்து அவருக்கு எவருடைய மரணமும் அறிவிக்கப்படுவதேயில்லை என்பதை எண்ணிக்கொண்டே கேட்டேன். "அவர் நெசவு செய்த முதலியாரா..?"

"Y P யாதவ்..!" கர்ஜனை போன்ற குரலில் சொன்னார் அவர்.

Comments

Popular posts from this blog

முன்னுரையாடல்

மாசற்ற ஜோதி