மாசற்ற ஜோதி
நடந்து செல்லும் தூரம்தான் ஞானசபை நான் பிறந்து வளர்ந்த வீட்டிலிருந்து. எம் ஊரின் ஒவ்வொரு வீட்டிலும் ஒரு ராமலிங்கம் இருப்பர். எழுத்துக்கூட்டி படிக்கக் கற்றுக்கொண்ட வயதில் பிறர் உதவியின்றி முழுமையாய்ப் படித்த முதல் வாழ்க்கை வரலாறு அவருடையதே. அன்றும் அழுதுகொண்டே தான் படித்தேன். என் சகோதரி எப்போதும் அதி விரைவாக படிக்கக்கூடியவர். எங்கள் அன்னை தினசரி மற்றும் வார இதழ்களில் வரும் ராசி பலன், ஆன்மிக கதைகள், ஸ்தல வரலாறு போன்ற அவருக்கு ஆர்வமூட்டுபவற்றை சகோதரியையோ சகோதரி இல்லாத சமயங்களில் என்னையோ வாய் விட்டு வாசிக்க சொல்லி கேட்பார். ஐந்து வயது இருக்கலாம். ஏதோ ஒரு விடுமுறை நாளில் வீட்டருகில் வசித்த வயதான பாட்டிகள், சிறுமிகள் மற்றும் எம் அன்னையுடன் ஞானசபை அருகில் இருந்த வள்ளலார் வாழ்க்கை வரலாறு கண்காட்சி அறைக்கு பெரியவர்களுக்கு 25 பைசா நுழைவு கட்டணம், குழந்தைகளுக்கு இனாம் என்று 1 ரூபாய் 25 பைசா கட்டணம் செலுத்தி எல்லோரும் உள்ளே சென்றோம். வள்ளலாரின் வாழ்வில் பிறப்பு முதல் ஜோதியுடன் கலந்தது வரை நிகழ்ந்த முக்கிய சம்பவங்களை படங்களாக வரைந்து ஒவ்வொரு படத்திற்கு கீழேயும் அந்த படம் குறிக்கும் நிகழ்வை சொற்களால் விளக்கி அவற்றை அந்த அறையில் 'ப' வடிவில் வரிசையாக அமைத்திருந்தார்கள். நாம் 'ப' வின் ஒரு முனையில் நுழைந்து அடுத்த முனையில் வெளிவர வேண்டும். நுழைவு சீட்டு வாங்கும் இடத்தில் 1 சீட்டு 25 பைசா என்றால் 5 சீட்டுக்கு எவ்வளவு என்று குழந்தைகளைப் பார்த்து ஒரு மூதாட்டி கேட்க ஒன்னேகால் ரூபாய் என்று வேகமாக பதிலளித்த நான் இன்னொரு சிறுமியின் தாயார் ஏன்தம்பி அஞ்சு டிக்கெட் வாங்கறோமே 15 பைசா போட்டுக்கக்கூடாதா எனக் கேட்பதை உணர்ந்து அப்போ 75 பைசா என்று எண்ணிக்கொண்டு உள்ளே சென்றேன். அன்னை சகோதரியிடம் கண்காட்சியிலிருந்த பத்திகளைப் பாட்டிகளுக்கு படித்துக்காண்பிக்க சொன்னார். எனக்கு எப்போதும் நானே வாசித்துக்கொள்ள வேண்டும். படங்களை எல்லாம் பார்த்து, அதில் இருப்போரை எல்லாம் கவனமாக நோக்கி பத்திகளை படித்து பசியிலிருக்கும் குழந்தையை எண்ணி சோகத்தில் குளமாயிருந்த என் கண்ணீர், நான் 'ப' வின் நடு வரிசையின் மையத்தை அடையும் முன் குழுமத்தின் ஏனையோர் வெளியோரும் வரிசையின் மையத்தைக் கடந்திருந்ததை உணர்ந்தபோது அருவியாகியிருந்தது. அக்காவிற்கு இணையான வேகத்தில் படிக்க இயலவில்லை என்ற தாழ்வுணர்ச்சி சத்தமின்றி அழ செய்ய யாரேனும் பார்த்துவிட்டால் என்ன செய்வது காரணம் கேட்பார்கள் என்ற அச்சம் ஒருபுறம் என்னை இன்னும் பின் தங்க செய்தது. யாரும் என்னை அவசரப்படுத்தவில்லை. அதில் பயனில்லை என்பதை நன்கறிந்த அன்னையும் அக்காவும் காத்திருந்து அழைத்து சென்றனர். பள்ளி கலைக்கழகத்தில் கைவினை போட்டியில் களிமண் கொண்டு நான் செய்தது அவர்தம் திருஉருவமே. மனதிற்கு மிக நெருக்கமானவர். சைவமும் சன்மார்க்கமும் வேறு வேறு என்றே அறியாத அக்காலங்களில் வள்ளலார் சைவ மார்க்கத்தில் இருந்த போது புனைந்தவை அனைத்தும் கேட்கவும், படிக்கவும் கிடைத்தன. இந்த புரிதல் வள்ளலாரை எமக்கு அறிமுகம் செய்த எம் அன்னைக்கு அப்போது இருந்ததா, இப்போதாவது இருக்கிறதா என்ற ஐயம் எப்போதும் உண்டு. அவரைப்பற்றி எல்லாம் தெரியும் என்ற உணர்வு இருந்ததுண்டு. ஒரு தை பூசத்திற்கு கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தும் சாரணியர் குழுவில் சென்றபோது உடனிருந்த மற்றோர் சாரணி கோயில் பூஜை செய்யும் குடும்பத்திலிருந்து நீ எப்படி வள்ளலார் சபைக்கு வந்தாய் என்று கேட்க அதற்கு முன் பலமுறை குடும்பத்தாருடன் ஜோதி தரிசனம் செய்திருந்த எனக்கு முதல் முறை குழப்பம் ஏற்பட்டது. இங்கு பல்வேறு தத்துவங்கள் இருப்பது பற்றிய முதல் உணர்வு தோன்றிய கணம் அது. அதுமுதல் , வள்ளலார் பற்றி புதிய அறிதலோ, மாற்று புரிதல்களோ நிகழ்ந்துகொண்டேதான் இருக்கிறது. எனக்கு மாசற்ற ஜோதி யும் பல புதிய கோணங்களைத் தொட்டு புதிய திறப்புகளைக் கொடுத்துள்ளது. வலி நிறைந்த கடைசி அத்யாயங்கள் அசோகமித்திரனின் பிரயாணம் சிறுகதையின் குருதேவரை நினைவுபடுத்தி, உறக்கம் கெடுத்து கண்ணீர் உகுத்து செயலறுக்க செய்தன.
இரா முருகனின் அரசூர் வம்சத்து வயசனை நினைவுகூற நேர்ந்தது. வயசனும் , வள்ளலாரை எண்ண செய்தார் . மாசற்ற ஜோதியின் வலிகளைக் கடந்து செல்ல வயசன் எனக்கு நம்பிக்கை அளிக்கட்டும்.
மிகச்சிறு வயதில் வறுமை மற்றும் பசியின் கொடுமைகளை உணர்ந்திருந்த பிஞ்சு மனம், உற்றார் சுற்றத்தின் சிறுமைப்படுத்தலுக்கும் இலக்காகி இருக்கலாம். எவ்வளவு வலிகளை விழுங்கி செரித்ததோ , உலகின் சகல ஜீவராசிகளின் பசியையும், வலியையும், வருத்தங்களையும் களையும் மனஉறுதியையே தன் ஆளுமையாகக் கொண்டது. மற்றவர்கள் தம் மகத்துவத்தை ஏற்றுக்கொள்ள சான்றாக அதிசயங்கள் நிகழ்த்த வேண்டிய அவசியமே வள்ளலாருக்கு இருந்திருக்காது. மதத்தை ஆன்மிகத்திற்கான வழிகாட்டியாக அல்லாமல் அதிகாரத்திற்கான ஆயுதமாகக் கொண்டோரின் அகங்காரத்திற்கு இரையாகினாரோ? இன்றும் முழுமை பெறா பேரறிவின் எஞ்சிய எல்லைகளை அன்றே தொட்டுவிட்டாரோ? நாமறிந்தோம் என்றெண்ணத்துணியேன். எண்ணம், சொல், செயலால் எவ்வுயிர்க்கும் தீங்கிழைக்காது, வள்ளலாரின் ஆன்மா நிறைவை எய்த மாசற்ற ஜோதியை கைகொள்கிறேன். முயற்சி திருவினையாகா தருணங்களையும் ஏற்றுக்கொள்ளும் தன்னிறைவை வள்ளலார் எனக்கு அருளட்டும்.
Comments
Post a Comment