நீரோட்டமும் நினைவோட்டமும்

கொட்டும் ஷவரிலிந்து தோள்பட்டையில் சில்லென்று இறங்கிய நீர் கணுக்கால்கள் மற்றும் மணிக்கட்டுகள்  வழியாக சூடாக வெளியேறிக்கொண்டு இருந்ததை உணர்ந்தபோது தோன்றியது ஆராத்யா குறிப்பிட்டது இதுதானோ. அலுவலக நண்பர்களுடன் அவரைச் சந்திக்க சென்ற போது அவர் பேசியதைப் புரிந்துகொள்ள இயலவில்லை.  அந்த சந்திப்பு அவர் எப்போது மீண்டும் பணிக்கு திரும்புவார் என்பது பற்றி அறியத்தான். ஆனால் சூழலின் வலி எனது சிந்தையையும் முடக்கியிருந்தது. 

"ஹேட் எ ஹாட் ஷவர் ?" ஒரு குறும்பு சிரிப்புடன்  கேட்டார்.

எதற்கு என்று புரியாமல் திரும்பி பார்த்தேன்.

"ஓ , கோல்ட் ஷவரா ?"

ஆமாம் என்பதாய்த் தலையாட்டி வைத்தேன்.  அவரே தொடர்ந்தார்.

"விபத்துக்கு பின் நினைவு மீண்டதிலிருந்து, கழுத்துக்கு கீழ் எனக்கு ஹாட், கோல்ட் எல்லாமே ஒன்றுதான். மூளைக்கும் உடலுக்குமான தொடர்பு அற்றுவிட்டது. அதற்காக, உடலில் உள்ள திசுக்கள் அவற்றின் கடமைகளை ஆற்ற தவறுவதெல்லாம் இல்லை. உருவாகும், வளரும், உருவாக்கும், சிதையும்..  மூளையின்  எந்த பங்களிப்பும் இன்றி" 

என் நினைவை மீட்டு நிகழ்தளத்தில் தளையிட்டேன்.  நீர் சீராகக் கொட்டிகொண்டிருந்தது. ஓரிரு நொடிகளில் நினைவு தளையை மீறி மீண்டும் எங்கோ சென்றது. சற்று முன் நிகழ்ந்தவற்றைத் தொகுத்துக் கொள்ளவும்  முயன்றது. 
 

"என்ன சுத்தி முன்னேறனும் ன்ற நெனப்பு உள்ளவங்க யாரும் எப்போவும் இருந்ததேயில்லை. நானும் ஜாலியா இருக்கதான் விருப்பப்பட்டேன். ட்வெல்த் ஹாஃப் எர்லி ல 3 சப்ஜெக்ட்ஸ் ல நா பாஸ் ஆகல. பேரன்ட்ஸ் டீச்சர்ஸ் மீட் ல, டீச்சர்ஸ் அடுத்து வர்ர 2 ரிவிஷன் டெஸ்ட் ல பாஸ் ஆகலனா , பப்ளிக் எக்ஸாம் எழுத விடமாட்டோம் னு சொல்லிட்டாங்க.  அப்போவும் எனக்கு பெரிசா ஒன்னும் ஹர்ட் ஆகல. ஆனா வீட்டுக்கு போன பிறகு அம்மா , அப்பா , அக்கா யாரும் என்கிட்டே பேசல. என்னோட ப்ரெசென்ஸ் ஆப்சென்ஸ்  எதையும் ரியலைஸ் பண்ணல. டேபிள் சேர் லாம்கூட அப்பப்போ எல்லாரோடையும் க்ளோசா இருக்கும். எல்லாரும் அவங்கவங்க வேலையா பார்க்கிற மாதிரி என்னை அவாய்ட் பண்ணாங்க.. பிரெண்ட்ஸும் தா... கண்ணு மூஞ்சிலாம் வீங்கற அளவுக்கு அழுதேன். அதுக்கு முன்ன எப்போ அழுதேன்னு நினைவு இல்ல.  ரிலேட்டிவ்ஸ் நெய்பர்ஸ் லாம் ஆளாளுக்கு அட்வைஸ் பண்ண ஆரம்பிச்சாங்க." இது தீக்ஷிதா. ஓவியம் பயில்பவர்.

ஓவியம் பயிலும் தோழி ஒருவர் ஒரு அவுட்லைன் வரைதலுக்கு புத்தகம் படிப்பது போல் காட்சி கொடுக்க சொல்லி வேண்டி இருந்தார். இதற்கென சிறப்பாக நீங்கள் எதுவும் செய்ய வேண்டாம். எப்போதும்போல நீங்கள் ஏதோ ஒருநிலையில் எதாவது ஒரு புத்தகத்தை விரித்து வைத்துக்கொண்டு  படியுங்கள். அது போதும் என்றிருந்தார். அவர் வரைந்து முடித்த சில நாட்களில் தீக்ஷிதாவை அழைத்து வந்து ஐஐடி மெட்ராஸ், இந்த வருஷம் பாஸ் அவுட் என்று என்று அறிமுகம் செய்து இவரும் உங்களை மாதிரியாக வைத்து அவுட்லைன் காட்சி வரைய வேண்டுமாம். ப்ளீஸ்.. என்றதை ஒருமுறை மீள்நினைவு செய்தேன்.

தீக்ஷிதா தொடர்ந்தார்.

"ரெண்டு மாசம் சாமீ வந்த மாதிரி படிச்சேன். ஸ்கோர் பார்த்துட்டு எங்க அப்பா ஐஐடி ல சில கோர்ஸ்க்கு அப்ளை பண்ணார். ஐஐடி மெட்ராஸ் ல டெக்ஸ்டைல் எஞ்சினீயரிங் ல சீட் கிடைச்சுது.  இப்படி ஒரு கோர்ஸ் இருந்ததோ, அதுல என்ன கத்துக்க போறேன் னோ, அதுக்கு எதிர்காலத்துல தேவை இருக்கானோ எதுவும் தெரியாது. சொல்லப்போனா ஒரு கோர்ஸ் செலக்ட் பண்றதுக்கு முந்தி இதெல்லாம் பார்க்கணும் னு கூட தெரியாது. தெரிஞ்சதெல்லாம் எங்க ஸ்கூல், ஃப்ரெண்ட்ஸ், நெய்பர்ஸ் , ரிலேட்டிவ்ஸ் சர்க்கிள் ல இருந்து ஐஐடி கு போற மொதோ ஸ்டுடென்ட் நாந்தாங்கறது மட்டும்தான். ஜாயின் பண்ணிட்டேன். "

என்னுடைய அலுவலகத்தில் என் குழுவில் ஆராத்யா விட்டுச்சென்ற இடம் நிரப்பப்படாமல்,  அவசரமாக நிரப்பப்பட வேண்டிய நிலையில் இருந்தது. பணியின் தன்மை பற்றி விளக்கி பணியை இவருக்கும் இவரை குழுவிற்கும் பரிந்துரை செய்யலாம் என்றே, உரையாடலை தொடங்கியிருந்தேன். ஆனால் அதைத் தவிர்த்து பேச்சு எங்கெங்கோ சென்று கொண்டிருந்தது. அவரே தொடர்ந்தார்.
 
"கேம்பஸ் ல ஒரு ஸ்டார்ட்அப்ல யூ எக்ஸ் டிசைனரா வேல கிடச்சுது. ஆஃபர் லெட்டரோட என் டீச்சர்ஸ பார்க்க ஸ்கூல் போனேன். நா பாஸ் ஆனதுல அவங்களுக்கு இருந்த ஆச்சர்யம் ஐஐடி மெட்ராஸ் ல படிச்சேன்னு தெரிஞ்சப்போ அதிர்ச்சி யாகிருந்தது".    

யூசர் எக்ஸ்பீரியன்ஸ் டிசைன் என்பது எந்தவொரு மென்பொருளையும் அதன் பயனர் பயன்படுத்தும் அனுபவத்தை மேம்பட்டதாய் வைக்கும்  நோக்கத்துடன்,  வடிவமைப்பை முதல் முக்கிய படிநிலையாகக் கொள்வது. தொழில்நுட்பமோ, இடைமுகமோ இரண்டாம் பட்சம், பயனர் அனுபவம் மட்டுமே பிரதானம் என்று மனம் எண்ணிக்கொண்டிருக்க செவிகள் அவர் சொல்வதை கேட்டுக்கொண்டிருந்தன.

"ஒரு கிரிக்கெட்டர டேட் பண்ணேன். அவன் ரொம்ப சின்சியரா ஏதாது ஒரு பெரிய டீம் ல ஜாயின் பண்ண கடுமையா ப்ராக்டிஸ் பண்ணான். இவங்கல்லாம் ரொம்ப பாவம். மாசத்துல ஒரு நாள் லீவ். டெய்லி 8 மணி நேரம் 10 மணி நேரம் ப்ராக்டிஸ். பிடிச்சது சாப்பிட முடியாது. அதுகூட பரவால்ல. டயட் காக பிடிக்காததெல்லாம் சாப்பிடணும். ஒருநாள் என்கிட்டே, என்னால உன்கூட டைம் ஸ்பென்ட் பண்ண முடியல. ஒரு பெரிய டீம் ல செலக்ட் ஆகரத்துக்கு இன்னும் எவ்ளோ வருஷம் ஆகும்னும் தெரியல. கிரிக்கெட்டா  நீயா னு வரும்போது என்னால கிரிக்கெட்ட விட்டுக்கொடுக்க முடியாது. அதனால் உன் லைப் நீ பாரு . எனக்காக வெயிட் பண்ணாத ன்னு சொன்னான். தீவிரமா இலக்க நோக்கி போற ஒருத்தன முதல் தடவையா பார்த்தேன். சரி, ஆல் தி பெஸ்ட், டேக் கேர் னு சொல்லிட்டு வந்துட்டேன்." 

இவரது அனுபவம், எதிர்பார்ப்பு, புதிய சூழலில் தெரியாதவற்றை கற்றுக்கொள்ளும் ஆர்வம், தேவைப்படும் அவகாசம் மற்றும் வழிகாட்டுதல்கள் போன்றவற்றை மனம் எண்ணிக்கொண்டிருக்க செவிகள் இன்னும் கேட்கும் பணியை அதே பாணியில் தொடர்ந்து கொண்டிருந்தன.

"பெய்ண்டிங் கொஞ்சம் புடிச்சு பண்ணுவேன். ட்ராயிங் கத்துகிட்டா என்னோட ப்ரோஃபெஷன் கும் மதிப்பு கூட்டும்னு தோனுச்சு. ட்ராயிங் க்ளாஸ் ல ஜாயின் பண்ணேன். அங்க தான் நந்தினி அக்காவை பார்த்தேன். ப்ரோக்ராம்மர் தானாம். ஹாபிக்காக வரையறவங்களாம். அவங்களோட ரூம் மேட்ஸ் இன்னும் 4 பேரு. எல்லாரும் கவனமா அசைன்மென்ட்ஸ் செய்துட்டு வருவாங்க. தற்செயலா ரூம் மெட்ஸ் ஆன 5 பேருக்கும் எப்படி ஒரே ஹாபி அமைஞ்சது னு எனக்கு தோணும். "

இரண்டு படுக்கையறை கொண்ட இந்த பெரிய வசதியான வீட்டை நாங்கள் 10 பேர் சேர்ந்து வாடகைக்கு எடுத்துள்ளோம். எங்களில் ஐவர் வரைதலில் ஆர்வம் கொண்டவர்கள் மட்டுமல்லாமல் அதற்கான பயிற்சி வகுப்புகளுக்கும் தவறாமல் சென்று வருகிறார்கள். ஒவ்வொருவரும் வரைந்த சிறப்பான படங்களை நினைவு கூர்ந்தேன்.. 

தீக்ஷிதா பேசிக்கொண்டே இருந்தார்.. 

"கிருத்திகா தான் சொன்னாங்க. சின்னதுல வரையறதுதான் புடிக்கும். பொருளாதாரமும் நேரமும் படிப்பு , உத்யோகம் , சம்பளம் நோக்கிதான் நகர்த்துச்சு. விருப்பம் கனவுக்கெல்லாம் இடம் இருக்கல. இப்போ , சம்பளம் வந்ததும் முதல் செலவு  எனக்காக எனக்கு பிடிச்சதை செய்யணும்னு முடிவு பண்ணி ட்ராயிங் க்ளாஸ்கான  பீஸ், மீடியம் , மெடீரியல் கான செலவு ன்னு பண்றேன். அப்புறம் தான் வீட்டுக்கு அனுப்பறேன்னாங்க. மத்தவங்களும் கிட்டத்தட்ட இப்படிதான். நல்ல வைப் ல்ல..." 


நேரத்தைப் பார்த்துவிட்டு, யாராவது யாரையாவது பரிந்துரை செய்யட்டும் என்று தோன்ற அவசரமாக குளியலறைக்கு சென்றேன்.

ஆராத்யாவின் சொற்களுக்கான பொருளுணர மேலே விழுந்து இறங்கும் நீரின் குளிர் வெப்ப நிலைமாறுதல்களை அனுபவித்துக்கொண்டே, "ஆமாம் நல்ல வைப்" என்று எண்ணிக்கொண்டேன்.  







Comments

Popular posts from this blog

மெடிக்கல் ஆஃபீசர்

முன்னுரையாடல்

மாசற்ற ஜோதி