BOOK FAIR 2024

எதிர்பாராமல் கிடைத்தது புத்தக கண்காட்சிக்கு செல்லும் வாய்ப்பு. நம் தன்னாட்சி நிலையை இழந்தது முதல் வருடா வருடம் திட்டமிடுதலும் அனுமதி கோருதலும் மட்டும் நிகழும். பிறகு அதி முக்கிய காரியங்கள் எல்லா நாட்களையும் நிறைத்து, கண்காட்சியின் கடைசி நாள்வரை நேரமற்று போகும். 

சமீபத்தில் மரியாதைக்குறிய ஆசிரியர் ஒருவர் தலைமை ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்ற பிறகு பள்ளி முன்னாள் மாணவர்கள் குழு ஒன்றை வாட்ஸ்ஆப்பில் துவக்கி அதில் என்னையும் இணைத்திருந்தார். 350 க்கும் மேற்பட்டோர் அக்குழுவில் ஏற்கனவே இணைந்திருந்தார்கள். எங்கள் ஊரின் பள்ளி கல்வி பெற்ற முந்தைய தலைமுறை மொத்தமும் அதே பள்ளியில் பயின்றிருந்ததால் நம் உறவினர் பெரும்பாலோர் முன்னாள் மாணவர் குழுவில் மாணவராகவோ அல்லது அதே பள்ளியில் பயிற்றும்வித்து ஆசிரியராகவோ குழுவுடன் இணைக்கப்பட்டிருக்கும் அபாயம் இருந்ததால் , அக்குழுவில் நாம் மூச்சே விடுவதில்லை. நாம் இணைக்கப்பட்ட அதே நாளில் புதிதாக இணைந்தோர் சிலர் தம்மைப்பற்றிய அறிமுக குறிப்பு அனுப்பியிருந்தனர். அவர்களுள் ஒருவர் ஒரு சுட்டியைப் பகிர்ந்திருக்க நாம் அதை சொடுக்கி படிக்க அவர் சுவாரஸ்யமாக எழுதும் வழக்கமுள்ளவர் என்றறிந்து  அவரைத் தனி மெசேஜில் தொடர்புகொண்டு ஜூனியராக அறிமுகமாகி அவர் எழுத்தாளர் என்று அறிந்து  மேற்கொண்டு அவர் எழுத்துகளை  எங்கே படிக்கலாம் எனக்கேட்டு முகப்புத்தகத்தில் நட்பாகி தினசரி அவர் பதிவிடுவனவற்றை வாசிக்க முகப்புத்தகம் செல்கிறேன் பேர்வழி என இணைய சுழலில் அடிக்கடி சிக்கி நேரவிரயம் செய்வதை உணர்ந்து முகப்புத்தகக்கணக்கை முடக்கி வைத்திருந்தேன்.  நேற்று, கணவர் மஹிந்திரா சிட்டியில் இருக்கும் தன் நண்பர் மனைவி குழந்தையுடன் பீனிக்ஸ் மாலிற்கும் புத்தகக்காட்சிக்கும் வர இருக்கிறார். நாமும் செல்கிறோம் எனக்கூற, பீனிக்சில் அலைந்தால் புக் ஃபேர் செல்லும்முன் களைப்புறுவோம் என நாம் கூற , ஷாப்பிங் திட்டமெல்லாம் இல்லை அவர்களுக்கு , அங்குள்ள ஒரு ஐஸ் கிரீம் பாரில்  விற்கப்படும் ஐஸ் கிரீம் வகைகள் பிரான்ஸ் நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. அவை அங்கு மட்டுமே கிடைப்பவை. இதற்காகவே நண்பர் குடும்பம் பீனிக்சிற்கு வருகிறது என்று விளக்கம் கூற ,  சென்ற ஆண்டின் துவக்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட அயோத்திதாஸரியம் குழுவில் அறிவிக்கப்பட்ட ராஜ் கௌதமன் அவர்களின் புத்தகங்கள் , சிலம்பொலி குழுவில் அறிமுகமான ப சரவணன் பதவுரை இவற்றுடன் பள்ளி சீனியரான ஸ்ரீதேவி கண்ணன் அவர்கள் எழுதி கிழக்கு பதிப்பகம் வெளியிடும் மாசற்ற ஜோதி ஆகிய புத்தகங்களைக் குறித்துக்கொண்டு, பதிப்பகத்தாரின் ஸ்டால் எண்ணையும் குறித்துக்கொண்டு, கணவர் அனுமதித்த செலவுத்தொகைக்குள் எப்படி வாங்குவது என்று எண்ணிக்கொண்டிருந்தேன்.

நண்பர் குடும்பத்துடனான மதிய உணவிற்கு மேசை reserve செய்ய எப்போதும்போல் என் கணவர் அன்னலக்ஷ்மிக்கு போன் செய்ய , எப்போதும்போல் தயவு தாட்சண்யம் மரியாதை என ஏதுமற்று ஆல் புக்ட் என்ற இரண்டு வார்த்தைகள் வெளிப்பட்ட அதே நொடியில் தொடர்பும் துண்டிக்கப்பட்டது. 2 வருடங்களாக முயற்சித்தும் மதிக்காத விடுதியை விட்டுத்தள்ளுங்கள் . உலகின் தலைசிறந்த கிட்சனில் உணவு தயார் செய்து தருகிறேன் என்ற நம் சொற்கள் அவர் செவியில் ingress drop ஆகின. பிறகு இருவரும் புறப்பட்டு கண்களில் பட்ட முதல் சைவ விடுதியான கைலாஷ் பர்பாத்தில் table reserve செய்து நண்பர் வருகைக்கு காத்திருந்த 30 நிமிடங்களில் மெனு கார்டில் குறிப்பிட்டிருந்த உணவு பதார்த்தங்களில் சேர்க்கப்படுவற்றை , செய்முறைகளை படித்து , போனை நோண்டிக்கொண்டிருந்த போது மற்றோர் சீனியரான பத்மா சந்திரசேகரன் அவர்கள் அவருடைய புத்தகம் பற்றி பகிர்ந்து இன்று கண்காட்சிக்கு வர வாய்ப்புள்ளவர்கள் இருந்தால் சந்திக்கலாம் என செய்தி அனுப்பி இருந்தார். சீனியர் ஶ்ரீதேவி அந்த செய்தியை like செய்திருந்தார். எழுத்தாளர்களை நேரில் சந்திக்கும் தைர்யமெல்லாம் எப்போதும் இருந்ததில்லை. லேசான மனக்கிளர்ச்சி இன்று இருந்தது. 

மதிய உணவிற்கு பிறகு பீனிக்ஸில் சில கடைகளில் விண்டோவ் ஷாப்பிங் , சில கடைகளில் ஷாப்பிங் , குழந்தைக்கு டாய் ட்ரெயின் ரைட் , ஐஸ் கிரீம் எல்லாம் முடித்து கிளம்பும்போது 4 மணிக்கு கண்காட்சிக்கு வந்துவிடுவதாக சீனியர் ஸ்ரீதேவி அவர்களுக்கு செய்தி அனுப்பினேன். காரின் முன் இருக்கையில் நண்பருடன் அமர்ந்திருந்த அவர் குழந்தை சாலையில் போய்க் கொண்டிருந்த கார்களின் பெயர்களை மழலை மொழியில் கூறிக்கொண்டே வர, முன்னால் சென்ற வெண்ணிற கார் ஒன்றைக் காட்டி நண்பர் என்ன கார் எனக்கேட்க அங்கே இருப்பது வேன் கார் இல்லை எனக்குழறிக்கொண்டே தூங்கிவிட தூங்கும் குழந்தையை தூக்கிக்கொண்டு செல்வது இயலாது என  புத்தக கண்காட்சிக்கு செல்லும் திட்டம் கைவிடப்பட்டது.  

அதே நேரம், நான் இங்கு வந்துவிட்டேன் என சீனியரிடமிருந்து செய்தி வந்தது. நண்பர் குடும்பத்தை அருகில் இருக்கும் ஏதோ ஒரு  மெட்ரோ ரயில் நிலையத்தில் இறக்கிவிடுமாறு  சொன்னார். இதுதான் சாக்கு என கணவர் வண்டியை நேரே வீட்டிற்கு திருப்பிவிடப்போகிறார் என்ற எச்சரிக்கை உணர்வுடன் அவசரமாக சீனியர் வந்துவிட்ட செய்தியைக் கூற, கணவர் நந்தனம் மெட்ரோ ஸ்டேஷனில் இறங்கிக்கொள்ளுமாறு கூறினார்.  இன்று அமைச்சர் துரைமுருகனின் புத்தக வெளியீட்டிற்கு 2 அமைச்சர்கள் மற்றும் சதுரங்க சாம்பியன் குகேஷ் ஆகியோர் வருகையால் சாலையெங்கும் கடும்  வாகன நெரிசல், புத்தர் தலை நத்தைகளென சாலையெங்கும் குறுக்கும் மறுக்குமாக  கார்கள். கண்ணெதிரில் இருந்தும்  முன்னால் அமர்ந்திருந்த இருவரும் மெட்ரோ ரயில் நிலையத்தை தவறவிட  குழந்தையும் விழித்துக்கொண்டது. புத்தகக்காட்சிக்கு செல்வது நிச்சயமாயிற்று. 

ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்ளலாம் என சீனியர் கேட்க, நம் திருமணத்தின் போது  மேடையில் புகைப்படமெல்லாம் எடுத்துக்கொள்ள வேண்டி வருமே என்று சலிப்புறும் இயல்புடைய நமக்கு சீனியரிடம் என்ன சொல்வது எப்படி தவிர்ப்பது என்று சற்று அசௌகரியமாக இருந்தது. சீனியர் நுழைவுசீட்டு இல்லாமல் அனுமதிக்க செய்தார்.  விலையில் 30% சலுகை தர கிழக்கு பதிப்பகத்தில் பரிந்துரை செய்தார். பிறகு விஷ்ணுபுரம் சென்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தபோது கணவர் வேண்டுமென்ற புத்தகத்தை வாங்கிக்கொள் என்றார். இந்த கரிசனம் எல்லாம் ஒருவகை குறியாக்கட்டுரை என்று நன்கறிந்த நாம் சந்தேகம்போல் நீங்கள் அனுமதித்த பட்ஜெட்டை தாண்டினால் பரவாயில்லையா என கேட்க ஒருமுறைதானே வாங்கிக்கொள் என்றார். ஆடு தலையை அசைக்கும்போதே அரிவாளை இறக்கிவிடு ப்ரியா என்ற தன்னொலியை சிறப்பிக்க  மீனாம்பிகை Madam  அவர்களிடம் சுக்கிரி என அறிமுகம் செய்துகொண்டு 15 % சலுகையில் 2 புத்தகங்களை வாங்கிக்கொள்ள புத்தகங்களுக்கான தொகையை கணவனார் மின் பரிவர்த்தனை செய்துவிட்டு இதற்கான தண்டனை ஃபெப்ரவரியில் சம்பளம் வந்ததும் கிடைக்கும் எனக்கூற பனுவலுக்கு சென்று ப சரவணன் புத்தகத்தை தேடி , விசாரித்து இல்லை என அறிந்து , நண்பரின் குழந்தை பசிக்கிறது என கோவம்கொள்ள ராஜ் கௌதமனை  மறந்து திரும்பி விட்டோம்.

Comments

Popular posts from this blog

மெடிக்கல் ஆஃபீசர்

முன்னுரையாடல்

மாசற்ற ஜோதி